×

கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே யானை பரிதாப சாவு

கடையநல்லூர்: கடையநல்லூர் கருப்பாநதி அணைக்கட்டு அருகே பெண் யானை உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்து கிடந்தது. கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டியிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது கருப்பாநதி அணை. அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கடையநல்லூர் வனப்பகுதியான வைரவன்குளம் பீட் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு  ஏராளமான மான், மிளா, கேழை ஆடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று வைரவன்குளம் பீட் கருப்பாநதி அணைக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை கண்டறிந்து வனச்சரகருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின் பேரில் கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் லூமிக்ஸ், மேக்கரை வனவர் அருமைக்கொடி ஆகியோர் தலைமையில் வனக்காவலர்கள் சசிகுமார், ராமச்சந்திரன், பால்ராஜ் விரைந்து வந்து இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்தது 7 வயது பெண் யானை என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மைதீன்பிள்ளை, தமிழ்செல்வன், சுதன் தலைமையிலான மருத்துவ குழுவினரால் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே கடையநல்லூர் பீட் முந்தல்காடு வனப்பகுதியில் கடந்த மே மாதம் 28ம் தேதி தண்ணீர் தேடி வந்த குட்டி ஆண் யானை ஒன்று தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது. தற்போது 6 மாதங்களுக்குள் இரண்டாவதாக ஒரு யானை உடல்நலக்குறைவால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Elephant Paritabha Saw ,Kadayanallur Karuppanadi Dam ,Kadayanallur ,Paratabha Saw , Kadayanallur, Karuppanadi Dam, Near, Elephant, Paratabha Saw
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது